இளையராஜா-வைரமுத்து நட்பு உடைந்து போனதற்கு பல காரணங்கள் உண்டு.
ஆனால் அதில் ஒன்றை இரண்டை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஒன்று பாடல்களின் காப்பிரைட் பிரச்சனை...
மற்றொன்றை பற்றி இங்கே விளக்கமாக பார்க்கலாம்..
அது பாடலின் வரிகளில் ராஜாவின் குறிக்கீடு
இவை நான் சொந்தமாக ஊகித்து எழுதியவை இல்லை
தான் எழுதிய புத்தகம் ஒன்றில் வைரமுத்து வருத்தத்துடன் குறிப்பிட்டவை இவை...
பயணங்கள் முடிவதில்லை படத்தில் "இளைய நிலா"எனும் பாடல்
அது ஆரம்பத்தில்..
"சலவை நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"என்றுதான் வைரமுத்து எழுதினார்...
நிலாவின் களங்கத்தை தனது பாடலில் கழுவ நினத்ததை அவர் குறிப்பிடுகிறார்...
ஆனால் ராஜா எதார்த்தவாதி....
அவர் கவிதை வரிகளுக்கு கடிவாளம் போட்டார்..
அவர் இயர்க்கையான விசயத்தையே விரும்பினார்..எனவே அப்பாடலில் தலையிட்டு அதை மாற்றியமைத்தார்..பிறகே
"இளைய நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"
என்ற வரிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
அதே போலவே "அந்திமழை பொழிகிறது "பாடலிலும்
ஆரம்பத்தில்
"திராட்ச்சைமது வழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் "என்றே வைரமுத்து எழுதினார்..
அந்தோ பரிதாபம்!
ராஜாவால் அது அந்திமழை என்ற எதார்த்த வரிகளால் திருத்தியமைக்கப்பட்டது..
ஆனாலும் ராஜாவின் மீதான வைரமுத்துவின் மரியாதை குறைந்துவிட வில்லை....கலைஞன் அல்லவா?

இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய இந்த பிரிவுக்கடிதத்தை(இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்) படித்தால் அவர்களின் நட்பும், பிரிவின் கனமும் புரியும். அவர்கள் இணைய மாட்டார்களா என்று தவிக்கும் ரசிகர்களின் தாகமும் புரியும்.
"இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.
திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.
எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.
ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.
"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.
மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"
Tweet | ||||||
16 பேர் சொன்னது....:
வைரமுத்து அழகாக எழுத தெரிந்தவர். அதை விட, எழுத்தை விற்கத்தெரிந்தவர். அழகாக பேசுபவர்களும் அழகாக எழுதுபவர்களும் உண்மையை எழுதுகிறார்கள் / பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அவரவர் செய்யும் செயல்களே அவர்கள் குணத்தை காட்டுகிறது. எழுத்துக்குப்பின்னால் நல்ல செயல்களாக அவர் செய்த எதையும் கேள்விப்பட்டதில்லை!
எனக்கு ஒரு சந்தேகம். அந்த வக்கீல் நோட்டீஸ் எதற்காக அனுப்பப்பட்டது என்று உங்களுக்காவது தெரியுமா?
தாங்கள் வருகைக்கு நன்றி!
நானும் வைரமுத்துவிற்கு வக்காலத்து வாங்குபவன் இல்லை..எழுத்துக்களை மட்டும் நேசிப்பவன்...அவர் சொன்னதுபோல் பேரீச்சம்பழம் தின்றுவிட்டு கொட்டையைத்துப்புவதுபோல் அவர் எழுத்துக்களை தின்றுவிட்டு அவரை துப்பி விடுகிறேன்...
அரவிந்த் சார்..எனக்கும் அது புரியவில்லை..ஹா ஹா ஹா
Ilayaraja always great...Dont trust vairamuthu words....
dear anonymous...
i know...but ilaiyaraja also a arrogant person like vairamuthu..so i hate both of them but like their music and poetry
"சலவை நிலா பொழிகிறது
இதயம் வரை நனைகிறது"
"திராட்ச்சைமது வழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம.."
அட, அட இவ்வளவு மோசமாகவா வைரமுத்து எழுதினார்?!!! இது உண்மை என்றால் ஆரம்ப காலங்களில் இளையராஜா திருத்தியதால்தான் கவிஞரின் பாடல்கள் தப்பித்தன என்றுதான் சொல்லவேண்டும்!
//வைரமுத்து அழகாக எழுத தெரிந்தவர். அதை விட, எழுத்தை விற்கத்தெரிந்தவர். அழகாக பேசுபவர்களும் அழகாக எழுதுபவர்களும் உண்மையை எழுதுகிறார்கள் / பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அவரவர் செய்யும் செயல்களே அவர்கள் குணத்தை காட்டுகிறது. எழுத்துக்குப்பின்னால் நல்ல செயல்களாக அவர் செய்த எதையும் கேள்விப்பட்டதில்லை!//
இதைவிட தெளிவாக சொல்ல முடியாது!
கவிஞன் அவர்களே!தாங்கள் வருகைக்கு முதலில் நன்றி
//அட, அட இவ்வளவு மோசமாகவா வைரமுத்து எழுதினார்?!!! இது உண்மை என்றால் ஆரம்ப காலங்களில் இளையராஜா திருத்தியதால்தான் கவிஞரின் பாடல்கள் தப்பித்தன என்றுதான் சொல்லவேண்டும்!
//
அப்படியெல்லாம் சொல்லமுடியாது சார்..
கவிஞரின் மற்ற பாடல்களை நீங்கள் கேட்டதில்லையா?
கேட்டால் நிறைய உதாரணம் சொல்வேன்..
நீங்கள் குறிப்பிட்ட அதே பாடல்களில் மற்ற வரிகளை கவனிக்கவில்லையா நீங்கள்?
உதாரணம்;
"முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ
அது மழையோ"
இன்னும் ஏராளம்!ஏராளம்!
Dear annoymous!
//இதைவிட தெளிவாக சொல்ல முடியாது!//
அதுசரி
உங்களுக்கு வைரமுத்துமேல் ஏன் இவ்வளவு கோபம்?
"இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.///// intha varikale thavaru ... ilayaraaja ilai enral intha vairamuthu illai. athuthan unmai....
'Ilaya Nila' was changed by Director R.SunderRajan. He mentioned in an interview.
அருமை சகோ சாபி
வருகைக்கு நன்றி!நீங்கள் சொல்வது தவறு...சினிமா அல்லாமல் தனிப்பட்ட முறையில் புத்தகம் எழுதி வெற்றி பெற்றவர்...அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது வாங்கியது அதற்கு சான்று...சரியா?
நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்..எதையும் நாம் நேஎரில் சென்று பார்த்து எழுதமுடியாது..சில உண்மையாக இருக்கலாம்,,சிலது பொய்யாக இருக்கலாம்..வைரமுத்து குறிப்பிட்டிருந்தது அப்படி(நேரிடையாக அல்ல)
ஆனால் அந்திமழை பாடல் மாற்றியது இளையராஜா சார்தான்...அதை நேரிடையாக வைரமுத்து குறிப்பிட்டு இருந்தார்
சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!
கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும் அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில் ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..
அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.
இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!
கவிப்பேரரசுவின் இந்த விட்டுக் கொடுக்காத தன்மை இண்டஸ்ட்ரீ முழுக்கத் தெரிந்ததுதான். இதனால்தானோ என்னவோ அவரை எப்படியாவது கீழேயிறக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேருக்கு இருக்கு போலிருக்கு..! இயக்குநர் அமீர் ஒரு நிகழ்ச்சியில் மதன் கார்க்கியை மேடையில் வைத்துக் கொண்டே, “எப்பவுமே வைரமுத்துதான் உச்சத்துல இருக்காரு.. அவரை யாராச்சும் கீழே இறக்கி விடுவாங்களான்னு நானும் பார்த்துக்கிட்டேயிருக்கேன். யாராலும் முடியலை.. மதன் கார்க்கியாச்சும் அதைச் செஞ்சா நல்லாயிருக்கும்”ன்னாரு.. மதன் கார்க்கியால் சிரிக்க மட்டுமே முடிந்தது..!
அது போகட்டும்.. “சலவை நிலா”வுக்கு என்ன அர்த்தம்..?
Read more: http://www.truetamilan.com/2012/11/05-11-12.html#ixzz2jb6munHe
Post a Comment