வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

இந்திய விவசாயம்...

Thursday, November 24, 2011

மூட மூடையா விளயுமின்னு
மூட நம்பிக்கைல வித விதச்சேன்
மழை ஒரு சொட்டு விழலையே
உலை வீட்டில் எரியலையே


வறப்பு வெட்ட முதல்ல
வளையல் அடகு வச்சேன்
களை புடுங்க பிறகு
கம்மல காவு வச்சேன்


பூமிக்கடியில தண்ணி
புள்ளியா போச்சு
இப்படியே போனா
இனி நின்னுடுமோ மூச்சு?


இன்று வருமோ இல்ல நாள வருமோ?
இல்லாட்டி போனா
கடைசில என் சாம்பல
கரைக்கும் வெள்ளமா வருமோ?


சோலக்காட்டு பொம்மைக்கே
ஆடைக்கும் அலங்காரத்துக்கும் துப்பிருக்கு
சோலையம்மா மவ எனக்கு
கண்ணுல மட்டும் உப்பிருக்கு


கல்யாணத்துக்கு வரச்சொன்னா
குழந்தைக்கு பேர்வைக்க வந்தது போல
புசுக்குன்னு ஒருநாள்
பொல பொலன்னு பெஞ்சுது மழ

அடிச்ச பேய் காத்துல வீட்டுகூர
ஆகாயம் போயிடுச்சி
வீணா போன மழையால வீடுகரஞ்சி
வீதிக்கு வந்திருச்சி


கடைசியா உயிர்வாழ
வெதச்ச நெல் மிச்சமிருக்கு
அதுவும் கைகூடுமோ என
அச்சமும் நெஞ்சிலிருக்கு


விதச்ச நெல் விளஞ்சி ஒருநாள்
வீதிக்கு வந்ததையா!
பஞ்சத்துக்கு பாதி!
பங்கு போனது மீதி!