வலைப்பூவை வளைக்க ஒரு புதிய முயற்சி 1cC20fcayUuSv_WBoXudTTr0RBA

மறந்துபோன பறவை நீ!

Tuesday, November 02, 2010

என் இதயத்தில் கூடுகட்டிவிட்டு
எங்கோ பறந்து போன
எனை மறந்துபோன பறவை நீ!

இப்போது நீ வசிப்பது
எக்கிளையில்?

நிறைகுடம்  தழும்பாது
உண்மைதான் அதனால்தான்
வார்த்தைகள் எவ்வளவோ இருந்தும்
அரசின் சலுகைகள் போல
சிறிது சிறிதாக வெளியிட்டாய்!


நீ பேசும்போது ஒவ்வொரு
வார்த்தைகளும் ஓர் உளி!
கல்வெட்டிற்கான கல்லாய் என் இதயம்....

என் இதயத்தில் சிந்திவிட்ட
பாதரசமான் உன்னை
பொறுக்கியெடுக்கும்
பொறுமையும் கைகளும் எனக்கில்லை!


நீ ஒரு தொட்டாச்சினுங்கி
தெரியாமல் தொட்டுவிட்டேன்
தொட்டவனே பின்னர் சினுங்கினேன்...


என் தோளில் நீ சாயும் போது
பைசாநகரத்து கோபுரம்


எனை தீண்டும்போது தென்றல்..

சில்மிஷம் செய்யும்போது குழந்தை!

நீ இமைத்ததால்  வீசும்   காற்றில்
நான் குளிர் காய்கிறேன்..
நீ தூரமாய் இருப்பதால் யாரும் இதை
நம்புவதில்லை

மரங்கள் அருகில் இருந்தால் மட்டுந்தான்
காற்று வருமா?

உன்னை என் இதயத்தில்வைக்க
எனக்கு இஸ்டமில்லை

இதயம் என்பது தண்ணீரிலிருந்து
தூக்கியெறியப்பட்ட ஒரு மீன்!
அதில் உன்னையும் துடிக்கவைக்க
எனக்கு சம்மதமில்லை!

இந்த ஷாஜஹானுக்கு
உன் நினைவுகளே ஒரு நினைவு சின்னம்!

என் அருமை மகள்கள் சுமையா,சஃப்ரீன் ஃபாத்திமா...

Sunday, October 31, 2010



பெயரளவில்தான் நீ சுமையா
எங்களுக்கு என்றும்
இருந்ததில்லை சுமையாய்...

நீ காயப்படுத்துவதற்காகவே
காத்திருக்கிறது என் தேகம்
பூ தாக்கியா இரும்பு காயப்படும் என் மகளே!

ஒருவிதத்தில் நீ இருக்கிறாய்
எப்போதும் என் இமையாய்..


ஒருபிடி எழுத்துக்களால் ஊருக்கே
கவிதை வெளிச்சம் தருபவன் நான்.

உனக்கொன்று இல்லாமலா?
நீ ஒரு நதி
சில இலைகளையும் கிளைகளையும்
நதிகள் அடித்துச் செல்வதுண்டு
என்னை ஆணிவேரோடு
அடித்துப் போனது நீயே என் மகளே!

உனக்குத் தெரியுமா?
நான் உன் நினைவுகள்
எனும் முடி சுமக்கும்
கவரிமான்!
உன் முத்தத்தின் ஈரம்
எரிமலையையே நனைத்துவிடுமே
என் உள்ளத்தில் எரியும்
சோகம் எம்மாத்திரம்!

சிரி!
வாயில் நீர் ஒழுக சிரி
அலைகளின் சிரிப்புதான் நுரை!

சிரி கண்ணில் நீர் ஒழுக சிரி
மேகத்தின் சிரிப்புதன் மழை!

வா வந்தெனை கட்டிக்கொள்!

முத்தம் கொடுத்தே
முகத்தை அழி!

கசங்கிவிடாமல் என்னை பிழி!

என் தெருப்பக்கம்
தென்றல் இல்லாத பொழுது மூச்சு விடு!

நீ திடீரென் சிரிக்கிறாய்..

மின்னல் தோன்றி மறைகிறது

எங்கும் இருள் படர்கிறது
ஓ..நீ கோபம் கொள்கிறாய்!

என் கைகளில் தவழும் பிஞ்சு மேகமே

உன் முத்தத்தால் நீளும்
என் ஆயுள் கொஞ்சம் தங்கமே...


இந்தியக் கனவு

Friday, July 16, 2010


பிஞ்சு குழந்தையின்மஞ்சம் பார்தீர்களா?
இது நடை பாதை தொட்டிலா?
இல்லை கட்டிலா?

குழந்தாய் விழித்துக் கொள்!
குப்பைக்கும் உனக்கும் தூரமில்லை

பூமி கிரகத்தில் எங்களுக்கு வீடு
பூமி கிரகமே உனக்கு வீடு.

வறுமை தரைவிரித்து ஆடுகிறதென்பதை
நீ தலைவைத்து படுத்திருக்கும்
விளம்பர பலகைவிளக்குகிறது!

பாவம் நீ!
பால் பாட்டிலைப்போல்
உன் வயிரும் வெட்றிடமாய்...

அழைத்து உன்னை உணவளிக்க
அங்கே யாரும் இல்லையா?
ஓ...காகத்தைவிட
கேவலமானவர்களா நாம்?

இந்த குழந்தையின் கனவுக்கும்
இந்தியாவின் கனவுக்கும்வித்தியாசம் இல்லை...
குழந்தையின் கனவு...
அடுத்த வேளை உணவு
அல்லது இருப்பிடம்
இந்தியாவின் கனவு
இன்னொரு சுதந்திரம் அல்லது வல்லரசு!